குடும்பங்களின் சொத்தான சிறுவர்களை பெற்றோரும், மற்றோரும் அன்பாகவும், பாசமாகவும் நடாத்துதல் அவசியம். எல்லோரதும் மனதைக் கவர்பவர்கள் சிறுவர்கள். சிறுவர் சமுதாயம் சிறப்பாக அமையின் நமது எதிர்கால சமூகம் சிறப்புறும். எனவே, சிறுவர்கள் நற்பண்பு உடையவர்களாகவும் செயற்றிறன் மிக்கவர்களாகவும் வளர்க்கப்பட வேண்டும்.
இன்று எமது சிறுவர்கள் பலவித பிரச்சினைகளுக்குள்ளாகி வருகின்றனர். சிறுவர் தினம் என்று ஒரு நாளில் அவர்களின் நலத்தைப் பேண மக்கள் விழிப்புணர்வு செய்யப்படுகின்றனர். இன்றைய சிறுவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். அதேபோல் பாடசாலைகளும், சமய நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் சிறுவர் நலனுக்காக செயற்படுகின்றனர். அண்மையில் இலங்கையில் யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிறுவருக்கான தேசியத் திட்டத்தில் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் விளையாட்டு, குடும்பச் சூழல் போன்ற பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு, அதற்கான வேலைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தத்தம் சிறார்களின் மீது கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
வீடுகளில் சிறார்களை நல்வழிப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றனர். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, இறை சிந்தனை என்பவற்றில் பிள்ளைகளுடன் தாமும் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. இது சிறுவர் மேல் கொண்ட அதிக அக்கறையையும் வழி நடத்தலையுமே உணர்த்துகின்றது. வீடுகளில் நடைபெறும் பண்டிகை விழாக்களின் போது பெற்றோருக்கும், சகோதரருக்கும் சிற்றுண்டி பரிமாறிக் கொள்கின்றனர். சகோதர சமூகங்களுடன் பழகுவதால் சமூக விழுமியங்கள், புரிந்துணர்வு, மனப்பாங்கு என்பன சிறுவர் மத்தியில் வளர்ச்சியடைகின்றன. இவ்வாறே பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவச் சிறார்களுக்கு நல்ல விடயங்களை எடுத்துரைக்கின்றனர். தலைமைத்துவ பண்புகளையும், விழுமியங்களையும் மாணவர் மன்றங்கள் மூலமும் விழா நிகழ்ச்சிகள் மூலமும் கற்கின்றனர். பாடசாலை நிகழ்ச்சிகளுக்கான ஒழுங்குகள் செய்தல், அழைப்பு விடுத்தல், ஒத்துழைப்பு நல்குதல் என்பன யாவுமே மாணவர் தாமே பொறுப்பேற்று செய்ய வழிநடாத்தப்படுகிறார்கள்.
இன்றைய சிறார்களின் நலனில் பாடசாலையைப் போன்றே சமய நிறுவனங்களும் மிகுந்த அக்கறை செலுத்துகின்றன. பாடசாலைப் பாடத்திட்டத்தில் மாணவர் வழிபாட்டிடங்களை ஆசிரியருடன் சென்று பார்வையிடுதல் அவசியம் என குறிப்பிட்டுள்ளனர். தத்தம் சமய வழிமுறைகளுடன் ஏனைய சமய வழிபாடுகளையும் அறியச் செய்வதுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். சமய நிறுவனங்கள் விடுமுறை நாட்களில் சமய வகுப்புகளை நடத்துகின்றனர். ஒழுங்கான ஆடைகளை அணிய பழக்குகின்றனர். பெரியோரை உறவினரை மதிக்கவும், நூல்களை வாசிக்கவும், நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் பயிற்றுவிக்கின்றனர். இவ்வாறாகஇன்றைய சிறார்களின் நலனில் அக்கறை கொண்ட பெற்றோர்கள், பாடசாலை, சமய நிறுவனங்கள் நல்ல பழக்கவழக்கங்களை அவர்களுக்கு புகட்டுவதுடன், சமூக விழுமியப் பண்புகளையும் வளர்த்து எதிர்காலச் சமுதாயம் சிறப்புற வழிவகுக்கின்றனர்.
ஆக்கம் : U. சபருள்ளாஹ், JM. வசீம் அக்ரம்