புவி மேற்பரப்பில் மனிதனின் செயற்பாடுகளால் காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மழைவீழ்ச்சி குறைவடைந்து வெப்பநிலை அதிகரிக்கிறது வெப்ப அதிகரிப்பினால் வரட்சி நிலை ஏற்பட்டு நீரற்றுப் போகின்றது. இது புவியில் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கின்றது. இதனை நீக்கும் பொருட்டு செயற்கையாக மழையை பெய்ய வைக்கும் யுக்தியையும்
மனிதன் அறிந்துதான் வைத்திருக்கின்றான். மழையை செயற்கையாக உருவாக்க முடிந்தாலும் அதற்கு இயற்கை சில உதவிகளை செய்தால் தான் சாத்தியம். செயற்கை மழையை பெய்விக்கும் முறையானது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. வறண்ட பகுதிகளுக்கு செயற்கை மழை ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. உலக நாடுகளில் சீனாதான் அதிக அளவு செயற்கை மழையை பெய்ய வைத்திருக்கிறது. செயற்கை மழை பெய்விக்கும் முறையை மேக விதைப்பு (Cloud Seeding) என அழைக்கிறார்கள்.
மேகங்களின் மீது குறிப்பிட்ட இரசாயனத் துகள்களை தூவி செயற்கை மழை பொழிவிக்கப்படுகிறது. வெள்ளி அயோடைடு, திட கார்பன் டை ஆக்சைடு, சாதாரண உப்பான சோடியம் குளோரைட்டு, திரவ புரப்பேன் என்பன மேகங்களின் மீது தூவப்படும் இரசாயனப் பொருட்களாகும். அமெரிக்க வேதியல் நிபுணர் "வின்சென்ட் ஜோசப் ஸ்சேபர்" என்பவரே செயற்கை மழையைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவரது சோதனை முயற்சிக்கு 1946 இல் வெற்றி கிடைத்தது. ஆனால் முதல் மழையை உருவாக்க சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலானதாக கூறப்படுகிறது.
செயற்கை மழையை உருவாக்குவது எப்படி? முதலில் எந்த இடத்தில் மழையை உண்டாக்க விரும்புகிறோமோ அந்த இடத்தில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். இதற்காக கல்சியம் ஒக்சைட், கல்சியம் கார்பைட், யூரியா-அமோனியம் நைட்ரேட் கலவை, உப்பும் யூரியாவும் கலந்த கலவை போன்றவை வானில் தூவப்படுகின்றன. வானிலையில் உள்ள ஈரப்பதத்தை இவை உறிஞ்சி மழை மேகங்களை உருவாக்குகின்றன. பின்னர் மழை மேகங்களில் யூரியா, சமையல் உப்பான சோடியம் குளோரைட்டு, அமோனியம் நைட்ரேட், உலர் பணி என்பவற்றைத் தூவி மழை மேகங்களின் கணம் அதிகரிக்கப்படுகிறது. பின்னர் ஒன்று திரட்டப்பட்ட மேகங்கள் மீது வெள்ளி அயோடைட்டு, உலர் பனிக்கட்டி என்பவை தூவப்பட்டு மேகங்கள் குளிர்விக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளியானது மழையாகப் பெய்கின்றது. ஒவ்வொரு நிலையிலும் சூழ்நிலைக்கேற்ற முறையில் உத்திகளைக் கையாண்டு மழையை பெய்விக்கின்றார்கள்.
இவ்வாறு பெய்விக்கப்படும் செயற்கை மழையினால் பல சுவாரஸ்யங்கள் உலகில் நிகழ்ந்துள்ளன. வியட்நாம் போரில் ஆப்பரேஷன் "பாப்ஐ" என்ற பெயரில் செயற்கை மழை பொழிவித்து எதிரிகளின் போர்த் தளபாடங்கள் கொண்டு செல்லும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. சீனா 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது அந்தப் பகுதியில் காற்று மாசுக்களை சுத்தம் செய்யும் வகையில் செயற்கை மழை பெய்வித்தது. இடியின்றி மழை பெய்யவும் விமானநிலையப் பகுதிகளில் பனி மூட்டத்தைப் போக்கவும் மேக விதைப்பு முறையில் செயற்கை மழையை உருவாக்குகிறது அமெரிக்கா. இந்தியாவின் தமிழ்நாட்டில் 1985 மற்றும் 2003 இல் வரட்சியின் காரணமாக செயற்கை மழை
ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலும் செயற்கை மழை முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் இவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றே கூறப்படுகிறது.
செயற்கை மழை என்பது இதுவரை நாம் செய்திகளில் மட்டுமே கேள்வியுற்ற விடயம் ஆகும். ஆனால் செயற்கை மழை என்பது எமது நாட்டிலும் இப்போது சாத்தியமாகியுள்ளது. மவுசாகலையில் செயற்கை மழை பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இதன் பயனாக 45 நிமிடங்கள் அங்கு செயற்கை மழை பெய்துள்ளது. வறட்சி மிக்க பகுதிகளுக்கு செயற்கை மழை அவசியம் என்றாலும் செயற்கை மழையால் சில தீமைகளும் உண்டு. செயற்கை மழைக்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமைவதோடு தாவர வளர்ச்சி நிலை மந்தமாகும். காற்றுச் சூழல் பாதிப்புறும், அயோடைட்டு இரசாயனம் அதிகமானால் சருமத்தின் நிறம் பாதிக்கப்படும். மறதியை உண்டாக்கலாம். செயற்கை மழையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெய்ய வைக்கும் போது அது மற்ற இடத்தில் ஏற்படும் இயற்கை மழை பொழிவைப் பாதிக்கிறது.
செயற்கை மழை செலவுமிக்கது ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு கன அடி மழையைப் பெய்விக்க 16 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான இதன் கடின நிலை காரணமாக இது விஞ்ஞானிகளால் ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கம் : MF. முர்சிதா, AC. மைமூனா